புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு முன்னுரிமையளிக்குமாறு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரிக்கை

புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு முன்னுரிமையளிக்குமாறு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2020 | 3:10 pm

Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் எனவும் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு முன்னுரிமையளிக்குமாறும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

மக்களின் இறைமை அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன்னர் அதனை விரிவாக ஆராய வேண்டும் எனவும் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து அதிகாரங்களும் தனி ஒருவர் வசமாவது ஜனநாயக நாட்டிற்கு பாதகமான விடயமாக அமையும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களின் உண்மையான ஜனநாயக நிலைப்பாட்டை காண்பிப்பதில்லையெனவும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தின் அரசியலமைப்புப் பேரவையூடாக புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டும் எனவும் பொருட்கோடலை மேற்கொள்ள முடியாத வகையில் குறைபாடுகளின்றி அதனை தயாரிக்க வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

19 ஆவது திருத்தத்திலுள்ள முக்கிய நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை மற்றும் பொறுப்புடன் கூடிய அரச நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் விடயங்களை பாதுகாக்குமாறு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

20 ஆவது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு முன்னர் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்கு ஏதுவாக அனைத்துத் திருத்தங்களையும் மக்களுக்கு பகிரங்கப்படுத்துமாறு கிறிஸ்தவ சபை விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மெதடிஸ்த சபை, இலங்கைத் திருச்சபை, தென்னிந்தியத் திருச்சபை, இலங்கை பெப்டிஸ்ட் திருச்சபை, இலங்கை கிறிஸ்தவ சீர்திருத்த திருச்சபை, இரட்சணிய சேனை சபை உள்ளிட்ட பல அமைப்புகள் இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளன.

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட நாள் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட கூட்டு போராட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் யாவும் இருபதாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் கவனத்திற்கொள்ளாது கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

வலுவிழந்த பாராளுமன்ற சபை அறிமுகப்படுத்தப்படுகின்றமை, தேசிய கணக்காய்வு ஆணைக்குழு, தேசிய பெறுகை ஆணைக்குழு என்பன இரத்து செய்யப்படுகின்றமை மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படுகின்றமை அவசர சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படுகின்றமை தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு கிறிஸ்தவ மன்றம் கோரியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்