ஏப்ரல் 21 தாக்குதல்: உரிய தகவல் கிடைக்காமை புலனாய்வுப் பிரிவின் குறைபாடு என ரணில் தெரிவிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்: உரிய தகவல் கிடைக்காமை புலனாய்வுப் பிரிவின் குறைபாடு என ரணில் தெரிவிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்: உரிய தகவல் கிடைக்காமை புலனாய்வுப் பிரிவின் குறைபாடு என ரணில் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Oct, 2020 | 10:39 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவுகளுக்கு உரிய தகவல் கிடைக்காமை புலனாய்வுப் பிரிவின் குறைபாடு என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று சாட்சியமளித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐ.எஸ். அமைப்பின் நிலைப்பாட்டினை கொண்டவர்கள் நாட்டில் இருந்தாலும், அவர்களது செயற்பாடுகள் குறித்து தகவல்கள் வௌிவராமை, இணையத்தளம் ஊடாக மாத்திரம் அவர்கள் தொடர்புகளைப் பேணியமை தெரியவந்ததால் அந்த அமைப்பை இலங்கையில் தடைசெய்யவில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், ஐ.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டியிருந்ததாக முன்னாள் பிரதமர் ஆணைக்குழுவில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அரச நிர்வாகத்தின்போது தமது தரப்பிற்கும் மைத்திரிபால சிறிசேனவின் தரப்பிற்கும் இடையில் அரசியல் ரீதியாக பாரிய கருத்து மோதல்கள் ஏற்படவில்லை எனவும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது மற்றும் அபிவிருத்தி பணிகள் போன்ற அன்றாட செயற்பாடுகள் தொடர்பில் மாத்திரம் சில பிரச்சினைகள் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

பொதுவான செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் நோக்கிலேயே மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டதாகவும் அந்த பொருளாதார திட்டத்தை தயாரிப்பதில் தாம் தலைமைதாங்கிய ஐக்கிய தேசியக் கட்சி முன்னின்று செயற்பட்டதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அந்தக் காலப் பகுதியில் பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தை வாராந்தம் நடத்தியிருந்தால் ஏற்புடையதாக அமைந்திருக்கும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யுத்தம் இல்லாத சூழ்நிலையில், அதனை வாரத்திற்கு இரண்டு தடவைகள் கூட்டுவதும் ஏற்புடையது என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அப்போதைய அரசாங்கத்தால் நடத்தப்பட்ட பாதுகாப்பு பேரவைக் கூட்டங்கள் குறுகிய அறிவித்தலுக்கு அமைய இடம்பெற்றதாக சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, இதனால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கடமைகளை இரத்து செய்து பாதுகாப்பு பேரவை கூட்டங்களில் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இருந்த அரசாங்கங்கள் பாதுகாப்பு பேரவை கூடுவதற்கான நிலையான நாள் ஒன்றை ஒதுக்கியிருந்ததாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தை நடத்துவதற்கு வார நாள் ஒன்றை ஒதுக்க முடியுமாயின் அது சிறந்தது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யோசனை முன்வைத்ததாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

அத்தோடு , பாதுகாப்பு பேரவைக் கூட்டத்துடன் தொடர்புடைய அமைச்சரவை உப குழுவொன்றை ஸ்தாபிக்கவும் அவர் யோசனை முன்வைத்துள்ளார்.

இலங்கையில் வஹாப் வாதம் கற்பிக்கும் சில நிலையங்களுடன் தொடர்புகளைப் பேணிய மாணவர்கள் பின்னர் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்ததாக கிடைத்திருந்த புலனாய்வு அறிக்கை தொடர்பில் வினவப்பட்டபோது, அல்கைதா மற்றும் ஐ.எஸ். அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் ஊடகங்கள் இல்லாமல் இரகிய சாட்சியம் வழங்க விரும்புவதாக முன்னாள் பிரதமர் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஊடகங்கள் அற்ற சூழலில் இரகசியமான முறையில் முன்னாள் பிரதமர் அது தொடர்பில் சாட்சியமளித்துள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பிலான கூடுதல் பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இன்று ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பாக கிடைத்த புலனாய்வுத் தகவல்களை முன்னாள் ஜனாதிபதி அறிந்திருந்ததாகவும் ஒன்பதாவது நாளாகவும் சாட்சியமளித்தபோது அவர் கூறியுள்ளார்.

தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்த முன்னாள் ஜனாதிபதி வௌிநாடு சென்றதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்