போதைப்பொருள் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு

பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 12-10-2020 | 1:15 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதம நீதவான் மொஹமட் மிஹார் சந்தேக நபர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார். போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பாதாள உலகக்குழு தலைவரான பொடி லெசி என்றழைக்கப்படும் ஜனித் மதுசங்க சில்வாவின் ஒழித்துவைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதி சொலிஷிடர் ஜெனரல் திலிப பீரிஸ் நீதிமன்றத்தில் இன்று அறிவித்தார். பொடி லெசியை தடுப்புக்காவலில் விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிஷிடர் ஜெனரல் தெரிவித்துள்ளார். இதேவேளை, போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமன் வசந்த குமாரவினால் போதைப்பொருள் விற்பனையில் திரட்டிய 11 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸ் இன்ஸ்பெக்டர் தனக்கு கீழ் பணியாற்றிய சார்ஜன் ஒருவரின் வீட்டில் பணப்பொதியை மறைத்து வைத்திருந்ததாகவும் பிரதி சொலிஷிடர் ஜெனரல் திலிப பீரிஸ், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.