ஊரடங்கு பகுதிகளில் வர்த்தக நிலையங்களை மூட உத்தரவு

ஊரடங்கு அமுலிலுள்ள பகுதிகளில் வர்த்தக நிலையங்களை மூடுமாறு உத்தரவு

by Staff Writer 12-10-2020 | 2:48 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்பட்டுள்ளன. கம்பஹா மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். COVID - 19 தொற்று, தனிமைப்படுத்தல் செயற்பாடுகள், தொற்றுக்குள்ளானோரை கண்டறிதல் உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் அனைத்தும் நாளை (13) முதல் 3 நாட்களுக்கு மூடப்பட வேண்டுமென பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்தார். குறித்த பகுதிகளினூடாக வாகனங்கள் செல்ல முடியும் என்ற போதிலும், அந்தப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்துதல், எவரையாவது ஏற்றுதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள பகுதிகளில் விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையினால் உயர்தர பரீட்சார்த்திகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதென பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார். இதேவேளை, களுத்துறையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி தொடர்பிலும் இன்றைய ஊடக சந்திப்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் கருத்து வௌியிட்டார்.