மன்னாரில் இரு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன 

மன்னாரில் இரு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன 

by Staff Writer 11-10-2020 | 6:01 PM
Colombo (News 1st) மன்னார் மாவட்டத்தின் பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. COVID - 19 தொற்று ஒழிப்பு தொடர்பான தேசிய செயலணியின் தலைமை அதிகாரி, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அனலைதீவு மற்றும் காரைநகர் ஆகிய பகுதிகளில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு இன்றுடன் நீக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்படாமையால் அங்கு பிறப்பிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன்னர் இரண்டு நோயாளர்கள் தம்புள்ளை விசேட பொருளாதா மத்திய நிலையத்திலுள்ள 80 கடைகளுக்கு சென்றுள்ளனர். இதனால் கடந்த 04 ஆம் திகதி தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு சென்ற வர்த்தகர்கள் மற்றும் பொருள் கொள்வனவு செய்த அனைவருக்கும் இன்று PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதேவேளை, பிரென்டிக்ஸ் கொரோனா கொத்தணி பதிவானதன் பின்னர் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்ட இடங்களாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை பொரளை காசல் வீதி பெண்கள் வைத்தியசாலை ஹொரணை ஆதார வைத்தியசாலை வத்துபிடிவல முதலீட்டு வலயம் கட்டுநாயக்க முதலீட்டு வலயம் மினுவாங்கொடை பொலிஸ் நிலையம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் களனி பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியன பதிவாகியுள்ளன. இதேவேளை, மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,186 ஆக அதிகரித்துள்ளது. கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று நிலைமை தொடர்பில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் முகாமையாளர் மற்றும் சுகாதார அதிகாரிகளினால் ஆராயப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் 03 தொழிற்சாலைகள், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. குறித்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இதனிடையே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூன்று சிற்றூழியர்களுக்கு நேற்று மாலை COVID - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானோரை கண்டறிவதற்காக, இதுவரை 26,000 PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், மினுவாங்கொடை பிரென்டிக்ஸ் தொழிற்சாலையில் அனைத்து ஊழியர்களுக்குமான PCR பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இந்தநிலையில், எவரேனும் ஒருவர் செப்டெம்பர் 23 ஆம் திகதியின் பின்னர் மினுவாங்கொடை பிரென்டிக்ஸ் தொழிற்சாலையின் ஊழியர் எவரையாவது சந்தித்திருந்தால் PCR பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது இதனிடையே நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4,628 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3,307 பேர் குணமடைந்துள்ளதுடன் 1,308 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.