தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை: ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் விசேட திட்டம்

by Staff Writer 10-10-2020 | 7:32 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக இதுவரை காலமும் நடத்த முடியாமற்போன பாடசாலை மாணவர்களுக்கான இரண்டு பிரதான பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை நாளை (11) நடத்திவிட்டு உயர்தரப் பரீட்சையை நாளை மறுதினம் (12) ஆரம்பிக்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2,936 பரீட்சை மத்திய நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுவதுடன், இம்முறை 3, 31,694 பரீட்சார்த்திகள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் விசேட திட்டத்தின் கீழ் பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். கம்பஹா கல்வி வலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சுமார் 6000 மாணவர்களும் உயர்தரப் பரீட்சையில் 7000 மாணவர்களும் தோற்றவுள்ளனர். மினுவாங்கொடை கல்வி வலயத்தில் 50 புலமைப்பரிசில் பரீட்சை நிலையங்களும் 37 உயர்தரப் பரீட்சை நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. பரீட்சை காலத்தில் மாணவர்களுக்காக ரயில் பெட்டிகளை ஒதுக்கி போக்குவரத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டது.