ஒருங்கிணைந்த நடவடிக்கை பிரிவு ஸ்தாபிப்பு

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை பிரிவு ஸ்தாபிப்பு

by Staff Writer 10-10-2020 | 4:50 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த நடவடிக்கை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் பழகியவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நோக்கில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த தனிமைப்படுத்தல் நிலையங்களையும் நோயாளர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகளின் தரவுகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த புதிய நடவடிக்கை பிரிவு, சுகாதார அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனூடாக கொரோனா தொற்று தொடர்பில் பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை வழங்க முடியும் என ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கொரோனா நோயாளர்களை அடையாளம் காண்பதற்காக நேற்று (09) மாத்திரம் 5,333 PCR சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக COVID-19 ஒழிப்பு தொடர்பான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது. இதுவரை நாட்டில் 3,19,146 PCR சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாத்திரம் 35 கொரோனா நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள். ஏனைய முப்பது பேரில் மினுவாங்கொடை கொத்தணி கொரோனா நோயாளர்களுடன் பழகிய 27 பேரும் தொழிற்சாலையின் ஊழியர்கள் மூவரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனடிப்படையில், மினுவாங்கொடை கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,083 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மினுவாங்கொடை கொரோனா நோயாளர்களுக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 4,523 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், அவர்களில் 3,296 பேர் குணமடைந்துள்ளனர். 1,214 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.