பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமது உடல்நிலை தொடர்பில் தகவல் வழங்க வேண்டும்: கல்வி அமைச்சு அறிவிப்பு

by Staff Writer 09-10-2020 | 4:21 PM
Colombo (News 1st) தரம் 05 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் உடல்நிலை தொடர்பில் தகவல்களைப் பெற கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. COVID-19 தொற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தமது உடல்நிலை தொடர்பிலான தகவல்களை வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள், கல்வி அமைச்சின் info.moe.gov.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து தகவல்களை வழங்கி விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னர் இந்த விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்பதுடன், புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள தமது பிள்ளைகளுக்காக பெற்றோர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தகவல்கள் இரகசியமாக பாதுகாக்கப்படுமென கல்வி அமைச்சின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.