கொழும்பில் கொரோனா அவதான நிலைமை அதிகம்

கொழும்பில் கொரோனா அவதான நிலைமை அதிகம்: விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவிப்பு

by Staff Writer 09-10-2020 | 3:48 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் அதிகளவு கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்படுவதால், கொழும்பு மாவட்டத்திற்கே அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்கள் அருகருகே இருப்பதாலும் அதிகளவான மக்கள் நடமாட்டம் இருப்பதாலும் பாதிப்புகள் அதிகம் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அதிகளவான மக்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக நாளாந்தம் கம்பஹா மாவட்டத்திலிருந்து கொழும்பு மாவட்டத்திற்கு வருகை தருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனடிப்படையில், பிரென்டிக்ஸ் நிறுவன ஊழியர்கள் கொழும்பிற்கு வருகை தந்திருப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதனால், ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கொழும்பில் கொரோனா அவதான நிலைமை அதிகம் காணப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அனைவருடனும் பழகியவர்களை அடையாளங்கண்டு, அவர்களுக்கான PCR பரிசோதனைகளை மேற்கொள்ளும் செயற்பாடுகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, மினுவாங்கொடை தொழிற்சாலையில் பதிவான கொரோனா நோயாளர்களின் குருதி மாதிரிகளில் அதிகளவான வைரஸ் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.