மினுவாங்கொடை கொரோனா கொத்தணி: மேலும் 16 பேருக்கு தொற்று

மினுவாங்கொடை கொரோனா கொத்தணி: மேலும் 16 பேருக்கு தொற்று

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2020 | 8:14 pm

Colombo (News 1st) மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை கொத்தணியில் நேற்று 19 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டதுடன், நேற்று (08) மொத்தமாக 29 பேர் அடையாளங்காணப்பட்டனர்.

Brandix தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கும் அவருடன் பழகிய 18 பேருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாட்டிற்கு வருகை தந்த 07 பேருக்கும் குவைத்திலிருந்து வருகை தந்த ஒருவருக்கும் ஈரான் பிரஜைகள் இருவருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 4,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானோரில் 3,278 பேர் குணமடைந்துள்ளதுடன், 1,197 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றியவர்களில் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களைத் தவிர்ந்த ஏனைய சில மாவட்டங்களிலும் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கூறினார்.

இதேவேளை, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 10 மாதக் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.

தற்போது அந்த குழந்தை IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றே COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளது.

காய்ச்சல் காரணமாக இந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, வைத்தியர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் குழந்தையொன்றின் தந்தையொருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய குறிப்பிட்டார்.

கண்டியை சேர்ந்த குறித்த குழந்தை கடந்த இரண்டரை மாதங்களாக வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும், தற்போது அவர்கள் கொட்டிகாவத்தை பகுதியில் வசிப்பதாகவும் அவர் கூறினார்.

குழந்தையின் தந்தை இடைக்கிடை வைத்தியசாலைக்கு வருகை தந்தமையால், அவர்கள் இருந்த விடுதியிலுள்ள அனைவரையும் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.

இதேவேளை, ஹொரணை ஆதார வைத்தியசாலையின் 5 ஆம் இலக்க வார்ட் மூடப்பட்டுள்ளதுடன், ஒன்பதாம் இலக்க வார்ட் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Brandix நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரின் மனைவி ஐந்தாம் இலக்க வார்ட்டில் தாதியாக சேவையாற்றி வருவதாக குறித்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்