இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: சீனா வாக்குறுதி

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: சீனா வாக்குறுதி

எழுத்தாளர் Staff Writer

09 Oct, 2020 | 4:00 pm

Colombo (News 1st) இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது.

நாட்டிற்கு வருகை தந்துள்ள சீன உயர்மட்டக் குழுவினருடனான கலந்துரையாடலின் போது இந்த விடயம் தௌிவுபடுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளுக்கு முதலிடம் வழங்குவதாகவும் ஐ.நா கூட்டத்தொடரின் போது இலங்கை சார்பில் தாம் தொடர்ந்தும் செயற்படுவதாகவும் சீனா உறுதியளித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர் நிர்மாணப் பணிகளை துரிதகதியில் நிறைவு செய்வதற்கும் சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவு, வரவேற்கத்தக்கதாக காணப்படுவதாகவும் இதனைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு சீன ஜனாதிபதி முன்னுரிமை அளிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் இலங்கையின் இறையாண்மை, சுயநிர்ணயம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை பாதுகாக்க தாம் தொடர்ந்தும் முன்நிற்பதாக சீன தூதுவர் குழு தெரிவித்துள்ளது.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவின் அரசியல் குழு உறுப்பினர்கள், வௌிவிவகார ஆணைக்குழுவின் பணிப்பாளர் உள்ளிட்டோர் இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்தனர்.

கடந்த பொதுத்தேர்தலின் போது பெற்றுக்கொண்ட பாரிய வெற்றிக்கு இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சீன தூதுக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

யுத்தத்தை நிறைவு செய்ய சீனா பாரிய ஒத்துழைப்பை வழங்கியதாகவும் யுத்தத்தின் பின்னர் இரு நாடுகளுக்குமிடையில் சிறந்த உறவு காணப்படுவதாகவும் நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு சீனாவின் உதவி தொடர்வதாகவும் ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்துள்ளார்.

சீனாவுடனான வர்த்தக நடவடிக்கைகளின் போது நாட்டின் சந்தைக்காக சீன உற்பத்தி பொருட்கள் அதிகளவில் கொள்வனவு செய்யப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உள்ளக அபிவிருத்தி நிமித்தம் தேவையான ஒத்துழைப்பை வழங்க சீனா தயாராகவுள்ளதாக இதன்போது அந்நாட்டு தூதுக்குழுவினர் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

COVID-19 தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதன் பின்னர், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சீனாவிற்கு வருகை தருவாரென தாம் எதிர்பார்ப்பதாகவும் சீன தூதுக்குழுவினரிடம் இதன்போது தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்