யாழ், வவுனியா, மன்னாரில் சுகாதார சேவை சாரதிகள் சுகவீன விடுமுறைப் போராட்டம்

by Staff Writer 08-10-2020 | 7:23 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களை சேர்ந்த சுகாதார சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் இன்றும் (08) நாளையும் (09) சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறாயினும், COVID-19 காரணமாக மக்களினதும், நோயாளிகளினதும் நலன் கருதி அம்பியூலன்ஸ் சாரதிகள் மாத்திரம் பணியைத் தொடர்ந்துள்ளனர். சுகாதாரத்துறையில் பணியாற்றும் தம்மை வேறு திணைக்களங்களுக்கு இடமாற்றுவதை தவிர்க்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் சுகாதார சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வௌிப்படுத்தினர். மன்னார் மாவட்டத்தில் சுகாதார சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதிக்கு அருகில் இன்று காலை போராட்டமொன்றை நடத்தினர். போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு விஜயம் செய்த மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் T.விநோதன், சாரதிகள் வழங்கிய மகஜரை வடமாகாண சுகாதார பணிப்பாளரிடம் கையளிப்பதாக உறுதியளித்தார். இதேவேளை, வட மாகாண சுகாதார திணைக்கள சாரதிகள் சங்கம் யாழ். ஊடக மன்றத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியது.