பிரென்டிக்ஸ் பணியாளர்கள் 400 பேர் முன்னிலை

பிரென்டிக்ஸில் பணியாற்றியவர்களில் 400 பேர் சுகாதார தரப்பினரிடம் முன்னிலை 

by Staff Writer 08-10-2020 | 7:12 PM
Colombo (News 1st) பொலிஸ் தலைமையகத்தால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, பிரென்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களில் 275 பேர் நேற்றும் 125 பேர் இன்றும் சுகாதார தரப்பினரிடம் முன்னிலையாகியுள்ளனர். சுகாதார துறையினரிடம் முன்னிலையாவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். குறித்த ஆடைத் தொழிற்சாலையில் 1,402 பேர் தொழில்புரிந்ததாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் தனிமைப்படுத்தலுக்குட்படாத 24 இடங்களை சேர்ந்தவர்களை உடனடியாக தாம் வசிக்கும் பகுதியிலுள்ள சுகாதார தரப்பினரிடம் முன்னிலையாகி பதிவு செய்யுமாறு கோரப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் தற்போது கிடைத்துள்ள பதிவுகளுக்கு அமைய, மேலும் ஒரு சிலர் மாத்திரமே தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டியுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார். புலனாய்வுப்பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து இவர்கள் தொடர்பில் தகவல்களைத் திரட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுவரை தங்களைப் பதிவு செய்துகொள்ளாத, மினுவாங்கொடை பிரென்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை உடனடியாக தங்களின் பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.