மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்களின் தொகை 832 ஆகியது

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 832 ஆக உயர்வு 

by Staff Writer 07-10-2020 | 7:08 AM
Colombo (News 1st) நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4,252 ஆக அதிகரித்துள்ளது. நேற்றிரவு (06) மேலும் 124 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதேவேளை, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 10 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுளளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேநேரம், கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு நேற்று மாலை 6 மணி தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய மற்றும் ​வேயங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகள் உள்ளடங்களாக கம்பஹா மாவட்டத்தின் 4 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தற்போது அமுலில் உள்ளது. இந்நிலையில், கல்விப் பொது தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை நடாத்துவது தொடர்பில் இன்று (07) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் 11 ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த இரு நாட்களிலும் பரீட்சையை நாட்டதுவது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படும் என நேற்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.