பெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு

பெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு

by Bella Dalima 07-10-2020 | 4:31 PM
Colombo (News 1st) இமானுவேல் சார்பென்டியர் (Emmanuelle Charpentier ), ஜெனிஃபர் A. டவுட்னா (Jennifer A. Doudna) ஆகிய இரண்டு பெண்களுக்கு இவ்வாண்டிற்கான இரசாயனவியல் (வேதியியல்) பிரிவிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு சார்ந்த ஆய்வுகளுக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மரபணு தொழில்நுட்பத்தின் கூர்மையான கருவிகளில் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் கண்டுபிடித்துள்ள CRISPR / Cas9 மரபணு திருத்தக் கருவியைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணிய உயிரினங்களின் மரபணுக்களை மிக அதிக துல்லியத்துடன் மாற்ற முடியும். CRISPR / Cas9 மரபணு திருத்தக் கருவிகள் மூலக்கூறு வாழ்க்கை விஞ்ஞானத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. தாவர இனப்பெருக்கத்திற்கான புதிய வாய்ப்புகளை அவை கொண்டு வந்துள்ளன. அவை புற்றுநோய் சிகிச்சைகளுக்கு பங்களிப்பு செய்வதுடன், பரம்பரை நோய்களைக் குணப்படுத்தும் கனவையும் நனவாக்கும் என நம்பப்படுகிறது. இமானுவேல் சார்பென்டியர் பிரான்ஸ் நாட்டவர் என்பதுடன், ஜெனிஃபர் A. டவுட்னா அமெரிக்கவை சேர்ந்தவராவார். நாளை (8) இலக்கியத்திற்கும், 9 ஆம் திகதி அமைதிக்கான நோபல் பரிசும் 10 ஆம் திகதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படவுள்ளன.