நட்ட ஈடு கோரி இலங்கை வழக்கு தாக்கல்

பிரித்தானிய கொள்கலன்கள்; நட்ட ஈடு கோரி இலங்கை வழக்கு தாக்கல் 

by Staff Writer 07-10-2020 | 11:29 AM
Colombo (News 1st) பிரித்தானியாவிலிருந்து நாட்டிற்கு கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை கொண்டு வந்த தனியார் நிறுவனத்திடம் 1,694 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்ட ஈடு கோரி இலங்கையினால் Basel சாசனத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Basel சாசனம் மீறப்பட்டு கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த நிறுவனத்தினால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சாசனத்திற்கமைய, நாடொன்றிலிருந்து பிறிதொரு நாட்டிற்கு கழிவுப்பொருட்கள் கொண்டு செல்வதாயின் அதற்கு இரு நாடுகளின் இணக்கம் அவசியம் என அமைச்சினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கழிவுப் பொருட்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்னர் குறித்த நிறுவனம் அரசாங்கத்திடம் அனுமதி பெற்றிருக்கவில்லை. அதற்கு பதிலாக இலங்கை பிரஜையொருவரின் உதவியுடன், சட்டவிரோதமாக கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில், குறித்த நிறுவனத்திற்கு எதிராக இலங்கை, Basel சாசனத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மாதம் 27 ஆம் திகதி கழிவுப்பொருட்கள் அடங்கிய 21 கொள்கலன்களை மீளவும் பிரித்தானியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், விசாரணைகளின் பின்னர் ஏனைய கொள்கலன்களையும் பிரித்தானியாவிற்கு மீள ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த நிறுவனத்தினால் 263 கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.