திட்டமிட்ட திகதிகளில் பரீட்சைகள் நடைபெறும் - கல்வி அமைச்சு 

by Staff Writer 07-10-2020 | 2:32 PM
Colombo (News 1st) தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடக சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சைகள் ஏற்கனவே 2 தடவைகள் பிற்போடப்பட்டுள்ளதால் மீண்டும் அதனை பிற்போடுவதற்கு அரசாங்கம் எண்ணவில்லை என அமைச்சர் கூறினார். இதற்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது. அத்துடன், உயர்தர பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் உரிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார். பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டார். தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக விசேட பரீட்சை மத்திய நிலையங்களை ஸ்தாபிக்கவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சரவை பேச்சாாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.