கம்பஹா பகுதியை முடக்கியமைக்கான காரணம்

கம்பஹா பகுதியை முடக்கியமைக்கான காரணம் - இராணுவத் தளபதி விளக்கம்

by Staff Writer 07-10-2020 | 1:56 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் இன்று காலை வரையிலும் வைத்தியசாலையை நாடவோ அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்லவோ முன்வரவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது. இதனாலேயே, கம்பஹா பிராந்தியத்திற்கும் ஜா - எல மற்றும் கந்தான பொலிஸ் பிரிவுகளுக்கும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், சுகாதார நடைமுறைகளை தௌிவுபடுத்தும் ஊடக சந்திப்பொன்றை சுகாதார தரப்பினர் இன்று (07) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தனர். கொரோனா தொற்றுக்குள்ளானோரில் பெருமளவானோர் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனாலேயே கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் பிரிவின விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதன்போது தெரிவித்தார். அத்துடன் பிரெண்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் விடுமுறையில் வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அதனால் அவர்களின் உறவினர்களையும் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அநுராதபுரம், பதுளை, காலி, மொனராகலை, குருநாகல், புத்தளம் , களுத்துறை, கண்டி, மாத்தறை, கேகாலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தொற்றுநோய் பிரிவின விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, அத்தியவசியமற்ற நிகழ்வுகளை இரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் சூழ்நிலையை கருத்திற் கொண்டு, ஒன்றுகூடல்களை தவிர்க்குமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், இயலுமானவரை முதியவர்கள் வீடுகளிலிருந்து வௌியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சமூக இடைவௌியை பேணுமாறும் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.