கம்பஹாவின் 18 பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்

by Staff Writer 07-10-2020 | 5:13 PM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா, கனேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொடை, வெயாங்கொடை, மினுவாங்கொடை, வீரகுல, வெலிவேரிய, பல்லேவெல, யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கும் களனியின் ஜாஎல, கந்தான, பொலிஸ் பிரிவுகளுக்கும், நீர்கொழும்பு பிராந்தியத்தின் திவுலப்பிட்டிய மற்றும் சீதுவ பொலிஸ் பிரிவிற்கும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அந்தப் பகுதிகளுக்கு செல்வது, அங்கிருந்து வௌியேறுவது மற்றும் அந்தப் பகுதிகளூடாகப் பயணிப்பதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் அனைவரும் தத்தமது வீடுகளில் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள ரயில் நிலையங்களில் பயணிகளை ஏற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தூர இடங்களுக்கான பஸ் சேவைகள், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளூடாக பயணிக்க முடியும் என்ற போதிலும், குறித்த பகுதிகளில் பஸ்களை நிறுத்துதல் மற்றும் பயணிகளை ஏற்றுதலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்