இந்தியாவில் இருந்து வந்தவர்களுக்கு மினுவாங்கொடை தொழிற்சாலையுடன் தொடர்பில்லை: Brandix அறிக்கை

by Staff Writer 07-10-2020 | 7:54 PM
Colombo (News 1st) இந்தியாவில் இருந்து மினுவாங்கொடை தொழிற்சாலைக்கு வந்தவர்கள் தொடர்பாக பகிரப்படுகின்ற தகவல்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி இந்தியாவின் விசாகபட்டிணத்தில் இருந்து மத்தளை விமான நிலையத்திற்கு விமானம் மூலம் இந்திய பிரஜைகள் சிலர் நாட்டை வந்தடைந்ததாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பகிரப்படுகின்றன. Brandix நிறுவனம் ஏற்பாடு செய்த UL 1159 விமானத்தில் சிலர் மினுவாங்கொடை தொழிற்சாலைக்கு வந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தௌிவூட்டும் வகையில், Brandix நிறுவனம் இன்று அறிக்கையொன்றை விடுத்துள்ளது. இந்தியா அல்லது வேறு நாட்டைச் சேர்ந்த எவரும் தமது தொழிற்சாலைக்கு வருகை தரவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விசாகபட்டிணத்தில் இருந்து இலங்கை பணியாளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் மூன்று விமானங்களில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இலங்கை அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு அமைய தனிமைப்படுத்தப்பட்டதாகவும் Brandix நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்களில் எவரும் மினுவாங்கொடை தொழிற்சாலைக்கு செல்லவில்லை எனவும் அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பிரதம அதிகாரி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் வினவியபோது, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறு இந்தியப் பிரஜைகள் இலங்கைக்கு வருகை தரவில்லை என தெரிவித்தார். இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கை பிரஜைகள் உரிய முறையில் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்வதாகவும் அவர்களில் இறுதிக் குழுவினர் நேற்று தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்ததாகவும் இராணுவத் தளபதி கூறினார். குறித்த குழுவினருக்கும் தற்போதைய சம்பவத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.