ரியாஜ் பதியுதீன் தொடர்பான பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அறிவிப்பு பொருத்தமற்றது - சமல் ராஜபக்ஸ

by Staff Writer 06-10-2020 | 2:29 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அறிவிப்பு பொருத்தமற்றது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, ஏப்ரல் 21 தாக்குதல் ​தொடர்பில் முன்வைத்த வாய்மொழி மூல வினாக்களுக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார். விசாரணைகளின் போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் இந்த விடயங்களுடன் அவர் தொடர்புபடவில்லை என உறுதிபடுத்தப்பட்டமைக்கு அமைய ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்காக குற்றச்செயல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். விசாரணைகளின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் எதிர்காலத்தில் கைது செய்யப்படக்கூடும் எனவும் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். ரியாஜ் பதியுதீனின் கைது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் இருவேறு அறிவிப்புகள் தொடர்பிலும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி முன்வைத்த கேள்விக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ பதில் வழங்கினார். அதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரால் வௌியிடப்பட்ட அறிவிப்பு பொருத்தமற்றது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.