வீடுகளிலிருந்து வௌியேற வேண்டாம் என அறிவுறுத்தல்

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை வீடுகளிலிருந்து வௌியேற வேண்டாம் என அறிவுறுத்தல்

by Bella Dalima 06-10-2020 | 3:12 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களும் தற்போது வசிக்கும் பகுதிகளிலிருந்து வௌியேற வேண்டாம் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், வீடுகளிலிருந்து வௌியேறுவதைத் தவிர்க்குமாறும் குறித்த ஊழியர்களின் குடும்பத்தினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை, ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினரை, தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டார். இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று மாலை 6 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதுவரை கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய, வெயாங்கொடை, மற்றும் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வௌியேற வேண்டாம் எனவும் இராணுவத்தளபதி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.