இலங்கை தொடர்பில் சீனா - அமெரிக்கா இடையில் மோதல்

இலங்கை தொடர்பில் சீனா - அமெரிக்கா இடையில் கருத்து மோதல்

by Staff Writer 06-10-2020 | 10:41 PM
Colombo (News 1st) ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சீன - இலங்கை உறவு தொடர்பாகக் கூறிய கருத்திற்கு சீனா ஆச்சரியம் வெளியிட்டுள்ளது. வெளிப்படையான மற்றும் நன்மை பயக்கும் வகையில் இருந்தால், சீனாவுடனான இலங்கையின் பங்காளியாக ஆதரவளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா B. டெப்லிட்ஸ் டெய்லி மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இலங்கை வெளிநாட்டவர்களுடன் தொடர்புகளைப் பேணும் போது கவனயீனமாக இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு சீனா வழங்கும் கடன் தொடர்பாக விமர்சனத்திற்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ள தூதுவர், வேலைத்திட்டங்களுக்கு ஏற்ப பொதுவான போட்டித்தன்மை இருந்தால் கொடுப்பனவு குறைந்து செல்வது போன்றே அந்த வேலைத்திட்டங்களின் தரமும் உயர்ந்த நிலையில் இருக்கும் என கூறியுள்ளார். பட்டுப்பாதை வேலைத்திட்டத்தின் கீழ் சீனாவால் இலங்கைக்கு கொடுக்கப்படும் கடன் சர்வாதிகாரம் கொண்டது என்பதை தாம் கண்காணித்துள்ளதாக அந்த செவ்வியில் அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார். அதனூடாக குறித்த வேலைத்திட்டத்தை சீனாவிற்கு மாத்திரம் வழங்கும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது என்பதே அமெரிக்க தூதரின் கருத்தாகவும். சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் எனப்படும் US AID- உடன் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தம் வெளிப்படைத்தன்மை உடையதென நினைவுகூர்ந்த தூதுவர், இலங்கை என்ன செய்கிறது என்பதனை இந்நாட்டு மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் உண்மையான நட்பாளன் என்ற வகையில், அமெரிக்கா எத்தருணத்திலும் இலங்கை குறித்து ஆராய்ந்து பார்க்கத் தயாராகவுள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அமெரிக்க தூதுவரின் கருத்துகள் தொடர்பாக சீனா அதிருப்தி வெளியிட்டுள்ளது​. தேசிய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வி தொடர்பாக ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் பார்த்துக்கொண்டிருப்பதாக சீன தூதுவராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர கொள்கைகளைக் கடுமையாக மீறி சீன - இலங்கை தொடர்புகளை மூன்றாம் தரப்பின் தூதுவர் பகிரங்கமாக சிறுமைப்படுத்தியுள்ள விதம் குறித்து சீனா தனது கவனத்தை செலுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறையாண்மையுள்ள நாடுகளின் விடயத்தில் அமெரிக்கா தலையீடு செய்வது புதுமை அளிக்கும் விடயமல்லவென்றாலும் வேறு நாடுகளின் இராஜதந்திர தொடர்புகளைத் தமக்கு தேவையானவாறு திருப்புவதற்கு முனையும் வெட்கமற்ற செயற்பாடுகளைப் பார்த்து மக்கள் ஆச்சரியமடைவதாக சீன தூதுவராயலம் குறிப்பிட்டுள்ளது. சீனாவும் இலங்கையும் சுயாதீன நாடுகள் என சீனா விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் தேவைக்கேற்ப வெளிநாடுகளுடன் தொடர்புகளைப் பேணுவதற்கான முழு உரிமையும் இரண்டு நாடுகளுக்கும் இருக்கிறதென சீன தூதரம் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து பேசுவதற்கு அமெரிக்காவிற்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனவும் சீன தூதுவராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேலாதிக்கவாத அரசியலை சீன மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டிய அசியமில்லை எனவும், இலங்கை மக்களும் அதனை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை என்றும் இலங்கையிலுள்ள சீன தூதரகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சீன தூதுவராலயம் அமெரிக்காவிற்கு சில ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளது. 1. நீங்கள் COVID-19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கையை அதிகம் கொண்ட நாடுகளில் முதலிடம் பெற்றுள்ளீர்கள். தொற்றுக்கு எதிராக மற்ற நாடுகள் முன்னெடுக்கும் செயற்பாடுகளை அவமதிக்காதீர்கள். 2. நீங்கள் உலக வர்த்தக அமைப்பின் நிபந்தனைகளை பின்பற்றாமல், உலக சுதந்திர வர்த்தகத்தில் தங்கியிருந்து செயற்பட முனையாதீர்கள். 3. சர்ச்சைக்குரிய MCC ஒப்பந்தத்தை மறைத்து வெளிப்படைத் தன்மையின் வேடத்தை காட்டாதீர்கள். 4. பிற நாடுகளில் குண்டுகளைப் பொழிந்துகொண்டு வெளிநாடுகளின் இராணுவ முகாம்களை கைப்பற்றிக் கொண்டு பொருளாதாரத் தடைகளையும் விதித்துக்கொண்டு அந்த நாடுகளின் இறையாண்மையை மீறும் வகையில் பொதுவான ஒத்துழைப்புகளுக்கு எதிராக செயற்படாதீர்கள் என சீனா ஆலோசனை வழங்கியுள்ளது.