மூவருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு

by Bella Dalima 06-10-2020 | 4:19 PM
Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரொஜர் பென்ரோஸ் (Roger Penrose), ரெயின்ஹார்ட் கென்செல் (Reinhard Genzel) மற்றும் ஆண்ட்ரியா எம். கெஸ் (Andrea M. Ghez) ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. 'கருந்துளை' பற்றிய ஆய்விற்காக மூவரும் இணைந்து இந்த நோபல் பரிசைப் பெறுகின்றனர். முன்னதாக நேற்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் சி தீநுண்மியின் (Hepatitis C Virus) பரவல் மூலத்தைக் கண்டறிந்ததற்காக இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள், ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக நோபல் குழு நேற்று (05) வெளியிட்ட அறிக்கையில், ‘ஹெபடைடிஸ் A, B தீநுண்மி வகைகளைச் சாராத புதிய வகை ‘ஹெபடைடிஸ் C தீநுண்மியின் பரவல் மூலமானது இரத்தத்தில் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகளான ஹாா்வி ஜே.ஆல்டா் (Harvey J. Alter), சாா்லஸ் எம்.ரைஸ் (Charles M. Rice), பிரிட்டிஷ் விஞ்ஞானியான மைக்கேல் ஹௌட்டன் (Michael Houghton) கண்டறிந்தனா். அவா்களின் கண்டுபிடிப்பு, ஹெபடைடிஸ் சி தீநுண்மிக்கான அதிநவீன இரத்தப் பரிசோதனை முறைகளை உருவாக்கவும், நோய்த்தொற்றுக்கு எதிரான மருந்துகளை உருவாக்கவும் பெரிதும் உதவியது. ‘ஹெபடைடிஸ் சி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கானோரைக் காப்பாற்றுவதற்கும் மூன்று விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பே அடிப்படையாக அமைந்தது. அவர்களின் கண்டுபிடிப்பால் ‘ஹெபடைடிஸ் சி நோய்த்தொற்றை குணப்படுத்துவதற்கான சூழல் உருவாகியுள்ளது. தொடர்ந்து, வரும் தினங்களில் வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது.