20 ஆவது திருத்தம் குறித்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவு

20 ஆவது திருத்தம் குறித்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவு

எழுத்தாளர் Staff Writer

05 Oct, 2020 | 7:49 pm

Colombo (News 1st) 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது.

இந்த விசாரணை குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.

அத்துடன், மனுக்கள் தொடர்பிலான எழுத்து மூல சமர்ப்பணங்களை நாளை (06) பிற்பகல் 3 மணிக்கு முன்னர் மன்றில் சமர்ப்பிக்குமாறு இரு தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் அரசியலமைப்பிற்கு முரணான, நாட்டு மக்களின் இறைமைக்கு பாதகமான எவ்வித சரத்தும் உள்ளடக்கப்படவில்லை என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்தார்.

சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுவது போதுமானது என்பதுடன் அதனை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என தீர்மானிக்குமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை விடுத்தார்.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் ஊடாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரசியலமைப்புப் பேரவை போன்றன இரத்துச் செய்யப்பட்டாலும் அவற்றின் அதிகாரம் பொதுச்சேவை ஆணைக்குழுவினூடாக நடைமுறைப்படுத்தப்படும் கட்டளை சட்டங்கள் மூலம் நிர்வகிக்கப்படும் என சட்ட மா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம், சட்டத்துறை மற்றும் நீதித்துறைக்கு காணப்படும் அதிகாரங்களை சமநிலைப்படுத்துவதன் மூலம் மக்களின் சர்வஜன வாக்குப்பல இறைமை, 20 ஆவது திருத்தம் போன்ற அரசியலமைப்பு திருத்தம் மூலம் பாதுகாக்கப்படும் எனவும் சட்ட மா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் நீக்கப்பட்ட ஜனாதிபதிக்காக விடுபாட்டுரிமை உள்ளிட்ட அதிகாரங்கள் இருபதாவது திருத்தம் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் எனவும் சட்ட மா அதிபர் கூறினார்.

ஒரு வருடத்திற்குள் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம், சட்டமூலத்தின் முதல் வரைபில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், அதனை இரண்டரை வருடங்களாக பாராளுமன்ற குழுநிலையின் போது மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் சட்ட மா அதிபர் மன்றில் சுட்டிக்காட்டினார்.

மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியும் பாராளுமன்றமும் நாட்டு மக்களின் சர்வஜன வாக்குப்பல இறைமையினாலேயே செயற்படுகின்றனவே ஒழிய, வேறு எதனாலும் அல்லவென சட்ட மா அதிபர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் விருப்பத்திற்கமைய நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய கட்டளை சட்டங்களை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான பாராளுமன்றத்தின் தேவையை இதன்போது சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

நாட்டிலிருந்து தூரச்சென்றவர்கள் தமது தாய்நாட்டிற்காக செயற்படுவதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்குவதற்காகவே, வேறு நாட்டில் பிரஜாவுரிமை பெற்றுள்ள இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் இலங்கையின் இராஜதந்திர பதவிகளை வகித்தல், பாராளுமன்ற உறுப்பினராதல், ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதில் காணப்படும் சட்டத்தடை இருபதாவது திருத்தம் மூலம் நீக்கப்படுவதாக சட்ட மா அதிபர் குறிப்பிட்டார்.

நாட்டின் அபிவிருத்திக்காக செயற்படக்கூடிய இலங்கையர்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதை, அரசியலமைப்பை மீறுவதாக அர்த்தப்படுத்தக்கூடாது எனவும் அவர்களும் இலங்கைத் தாயின் பிள்ளைகள் எனவும் சட்ட மா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அரச சேவை பதவிகளில் இணையும் இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களிடம், அரசாங்கம் எதிர்பார்க்கும் சேவை கிடைக்கவில்லை என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கருதும் பட்சத்தில், அவர்களை பதவிகளிலிருந்து நீக்கும் அதிகாரம் திருத்தம் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் மன்றில் குறிப்பிட்டார்.

அவ்வாறானவர்கள் ஏதேனுமொரு வகையில் மக்களின் வாக்குகளினால் பாராளுமன்ற உறுப்பினர் அல்லது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அது மக்களுக்குள்ள இறைமை அதிகாரத்திற்கமைய இடம்பெறும் விடயம் எனவும் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்