20 ஆவது திருத்த சட்டமூலத்தில் உள்ளடக்க வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணி கடிதம்

20 ஆவது திருத்த சட்டமூலத்தில் உள்ளடக்க வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணி கடிதம்

20 ஆவது திருத்த சட்டமூலத்தில் உள்ளடக்க வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணி கடிதம்

எழுத்தாளர் Staff Writer

04 Oct, 2020 | 11:45 am

Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் குழுநிலை சந்தர்ப்பத்தின் போது உள்ளடக்க வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

பாராளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின் போது 20 ஆவது அரசிலமைப்பு திருத்த சட்டமூலத்தில் சேர்க்கப்படவுள்ள அரசாங்கத்தின் திருத்தங்களாக சட்ட மா அதிபர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள ஆவணத்தில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச முன்வைத்த எவ்வித திருத்தங்களும் உள்ளடக்கப்படவில்லை என்பதை கவலையுடன் அறியத்தருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த திருத்தங்களில் 3 திருத்தங்கள் மிகவும் தீர்மானமிக்கவை எனவும் அது தொடர்பில் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு தொடர்பில் கவனத்தில் கொள்ளாது செயற்படுவதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைத்த மக்கள் ஆணை மற்றும் அரசாங்கத்தின் நற்பெயருக்கு குந்தகம் ஏற்படுகின்றது என்பதை பிரதமர் ஏற்றுக்கொள்வார் என நம்புவதாகவும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு அதிக பங்குகள் உள்ள நிறுவனங்கள் பதிவாளரின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களை கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற கணக்காய்வில் இருந்து விடுவிப்பது முதலாவது விடயமாக தேசிய சுதந்திர முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

மக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக வர்த்தமானியில் அறிவிக்காமல் அவசரமாக சட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பிலும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்படலாம் என தேசிய சுதந்திர முன்னணி, பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டைப் பிரஜாவுரிமை தடையை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அப்பால் தூதுவர்கள் மற்றும் அரச உயர் பதவிகளுக்கும் விதிப்பதற்கு மாறாக அந்த தடை முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளமை மூன்றாவது விடயமாக தேசிய சுதந்திர முன்னணியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரசாங்கம் என்ற வகையில் அந்த தவறுகளை திருத்த வேண்டியுள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

இது மக்களின் ஆணையை பாதுகாப்பதற்காக தாம் கொண்டுள்ள அரசியல் நிலைப்பாடு எனவும் அரசாங்கம் அந்த அரசியல் நிலைப்பாட்டினைபொருட்படுத்தாமல் செயற்படுமாயின் அதன் அரசியல் பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை எனவும் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்