திவுலப்பிட்டிய, மினுவங்கொட பகுதிகளில் ஊரடங்கு

திவுலப்பிட்டிய, மினுவங்கொட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் 

by Staff Writer 04-10-2020 | 9:45 AM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் என பதில் பொலிஸ் மா அதிபர் C.D. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த பகுதிகளுக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு செல்லவும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணை சந்தித்தவர்கள் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக COVID தொற்று தடுப்பு செயலணியின் தலைவரும் பதில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார். இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்கள், தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கேற்ப செயற்பட வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். எவரேனும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் பட்சத்தில், சந்தேக நபருக்கு சிறைத்தண்டனை விதிப்பதற்கோ அல்லது அபராதம் விதிப்பதற்கோ சட்டத்தில் இடமுண்டு என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.