திவுலப்பிட்டிய பெண் ஒருவருக்கு கொரோனா

திவுலப்பிட்டியவில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 04-10-2020 | 8:35 AM
Colombo (News 1st) திவுலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 39 வயதான பெண்ணொருவர் கொரோனா தொற்றுடன் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக கம்பஹா வைத்தியசாலையில் குறித்த பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் காய்ச்சல் குணமடைந்த நிலையில், அவர் வீடு திரும்ப முன் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போதே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. குறித்த பெண் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், வைத்தியசாலை நிர்வாகத்தினர் 15 பேரும் தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த நிறுவனத்தைச் சேர்ந்த 40 பேரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பெண்ணுடன் தொடர்புகளை பேணிய ஏனையோரை அடையாளம் காண்பதுடன், பெண்ணுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்தும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, திவுலப்பிட்டியவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்புகளை பேணிய சுமார் 400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை, 20 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தொற்றுக்குள்ளான பெண் பயணித்த பொதுப் போக்குவரத்து தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது கட்டாயமானதாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. சமூகத்தில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதால், மக்கள் சமூக இடைவௌியை பேணுவதுடன் முகக்கவசங்களை அணிவது கட்டாயமானதாகும் என தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கூறியுள்ளார். இதேவேளை, நாட்டில் இதுவரை 3,395 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் (03) 7 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடலோர பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவரும் கத்தாரிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் குவைத்திலிருந்து திரும்பிய இருவரும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து திரும்பிய இருவரும் ஓமானிலிருந்து திரும்பிய ஒருவருமே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளான 3,254 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.