பொது மக்களை பாதுகாக்க ஆர்மேனியா நடவடிக்கை

அஸர்பைஜானுடனான தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க ஆர்மேனியா நடவடிக்கை

by Staff Writer 04-10-2020 | 1:49 PM
Colombo (News 1st) அஸர்பைஜானின் தாக்குதலில் இருந்து தமது நாட்டு மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஆர்மேனியா அறிவித்துள்ளது. 1990 களில் அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய நாகோர்னோ கராபாக் (Nagorno Karabakh) பகுதியில் இடம்பெறும் மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 230 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,​ கராபாக் கிராமத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அஸர்பைஜான் தெரிவித்துள்ளது. கராபாக் கிராமத்தை கைப்பற்றியமை தொடர்பில் அஸர்பைஜான் ஜனாதிபதி Ilham Aliyev இராணுவத் தளபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், 7 கிராமங்களை தமது நாட்டு படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் சமூக ஊடகங்களின் வழியே அறிவித்துள்ளார். இதனை கொண்டாடும் முகமாக நூற்றுக்கணக்கான மக்கள் அஸர்பைஜான் தலைநகரில் குழுமியுள்ளனர். மோதலை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தம் வகிப்பதாக பிரான்ஸ் முன்வைத்த கோரிக்கையை இரு தரப்பினரும் மறுத்துள்ளதுடன் ரொக்கெட் மற்றும் எரிகணை தாக்குதல்கள் ஏழாவது நாளாகவும் தொடர்கின்றன. நூற்றுக்கும் அதிகமான தாங்கிகளை பரஸ்பரம் அழித்துள்ளதாக இருதரப்பும் தெரிவித்துள்ளன.