வளர்ப்புப் பிராணிகளை பிடித்துச் செல்லும் சிறுத்தைகள்: அச்சத்தில் மக்கள்

by Staff Writer 03-10-2020 | 8:39 PM
Colombo (News 1st) மலையகத்தில் வீடுகளிலுள்ள வளர்ப்புப் பிராணிகளை சிறுத்தைகள் பிடித்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அண்மைய சம்பவம் நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. நுவரெலியா - கிறிஸ்லர்ஸ் பார்ம் பகுதியிலுள்ள குடியிருப்புப் பகுதிக்கு சிறுத்தை வரும் காட்சி, அங்கிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது. சந்தடியில்லாமல் வந்த சிறுத்தை, வீட்டிற்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த நாயை தூக்கிச்சென்றது. கிறிஸ்லர்ஸ் பார்ம் பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வாழ்வதுடன், இவ்வாறான சம்பவங்களினால் இங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தைகள் தாம் வளர்த்த கோழி, பூனை, நாய்களை பிடித்துச் சென்றுள்ளதாகவும் ஒருவரைத் தாக்கியுள்ளதாகவும் மக்கள் கூறினர். சிங்கமலை வனாந்தரத்திலுள்ள சிறுத்தைகளே தமது பகுதியில் நடமாடுவதாக மக்கள் குறிப்பிட்டனர். இதேவேளை, கிறிஸ்லர்ஸ் பார்ம் பகுதியிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குடியிருப்புப் பகுதியிலுள்ள பொறியில் சிக்கி சிறுத்தையொன்று உயிரிழந்த சம்பவம் ஒரு வருடத்திற்கு முன்னர் பதிவானது.