யாழ். வடமராட்சியில் கடலட்டை பிடிக்கும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

by Staff Writer 03-10-2020 | 7:47 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டவர்களில் 09 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், குறித்த பகுதியில் கடலட்டை பிடிக்கும் 70 பேர் வாடிகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொடிகாமம் - விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு இவர்கள் 09 பேரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் கூறினார். இவர்கள் 9 பேரும் மூன்று ட்ரோலர் படகுகளில் இந்திய கடல் எல்லைக்கு சென்று, இந்திய மீன்பிடிப் படகுகளில் ஏறி, அந்நாட்டு மீனவர்களுடன் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனால் இவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டார். இதேவேளை, வடமராட்சி கிழக்கு பகுதியில் கடலட்டை பிடிக்கும் 70 பேர் மீன்வாடிகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 60 பேருக்கு இன்று PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஏனைய 12 பேருக்கும் நாளை PCR சோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.