பகலைக் காட்டிலும் இரவில் அதிக வெப்பம்

பகலைக் காட்டிலும் இரவில் அதிக வெப்பம் நிலவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது

by Bella Dalima 03-10-2020 | 4:48 PM
Colombo (News 1st) புவி வெப்பமடைதல் காரணமாக பகல் பொழுதைக் காட்டிலும் இரவு நேரம் அதிகளவு வெப்பத்துடன் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில், புவி வெப்பமடைதல் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலையை பாதித்து வருவது தெரிய வந்துள்ளது. எக்ஸிடெர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் படி புவி வெப்பமடைதலால் உலகளாவிய நிலப்பரப்பில் பகல் மற்றும் இரவு நேர வெப்பமயமாதலில் மாற்றங்கள் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 1983ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான கால இடைவெளியில் பகல் மற்றும் இரவு நேர வெப்பமயமாதலின் சராசரி ஆண்டு வெப்பநிலை 0.25 செல்சியஸிற்கும் அதிகமாக உள்ளமை தெரியவந்துள்ளது. சில இடங்களில் பகல் நேரம் விரைவாக வெப்பமடைந்தாலும் இரவு நேர வெப்பமயமாதல் இரு மடங்கிற்கும் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "வெப்பமயமாதலின் சமச்சீரற்ற தன்மை" என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு பகலில் மேகங்களின் மேற்பரப்பைக் குளிர்வித்து, அதிகளவு இரவு நேர வெப்பமயமாதலுக்கு வழிவகுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.