பூவெலிகட கட்டட இடிவிற்கு பலமற்ற கட்டமைப்பும் தரமற்ற கட்டுமானமுமே காரணம்: மத்திய மாகாண ஆளுநர்

பூவெலிகட கட்டட இடிவிற்கு பலமற்ற கட்டமைப்பும் தரமற்ற கட்டுமானமுமே காரணம்: மத்திய மாகாண ஆளுநர்

பூவெலிகட கட்டட இடிவிற்கு பலமற்ற கட்டமைப்பும் தரமற்ற கட்டுமானமுமே காரணம்: மத்திய மாகாண ஆளுநர்

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2020 | 3:51 pm

Colombo (News 1st) கண்டி – பூவெலிகட பகுதியில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தின் அனைத்து இடிபாடுகளும் அகற்றப்படும் வரை பல்மாடி கட்டட நிர்மாணங்கள் குறித்த முடிவை எட்ட முடியாதென தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் U.கமகே தெரிவித்துள்ளார்.

தாழிறங்கிய கட்டடத்தின் இடிபாடுகளை தேசிய கட்டட ஆய்வு நிறுகவம் ஆய்வுக்குட்படுத்தி இந்த இடைக்கால அறிக்கையை தயாரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், ஆய்வைப் பூர்த்தி செய்வதற்கு போதுமான மாதிரிகள் கிடைக்கவில்லை என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளதாகவும் மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இடிபாடுகளை அப்புறப்படுத்திய பின்னர் முழுமையான அறிக்கையை தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தயாரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கட்டடம் இடிந்து வீழ்ந்தமைக்கு பலமற்ற கட்டமைப்பும் தரமற்ற கட்டுமானமும் காரணமாக அமைந்துள்ளதென மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டட நிர்மாணம் மற்றும் புனர்நிர்மாணம் மேற்கொள்ளப்பட்ட 03 சந்தர்ப்பங்களில், கண்டி மாநகர சபையின் அனுமதி பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

முதலில் 03 மாடி கட்டடத்தை நிர்மாணிப்பதற்கும் இரண்டாவது சந்தர்ப்பத்தில் மேலுமொரு மாடியை நிர்மாணிப்பதற்குமான அனுமதி நகர சபையிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

மூன்றாவது சந்தர்ப்பத்தில், கட்டடத்தின் நான்காவது மாடி மற்றும் மேற்கூரையை நிர்மாணிப்பதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் ஆலோசனைகளை முற்கூட்டியே பெற்றுக்கொள்வதன் மூலம், இத்தகைய ஆபத்துகளை குறைத்துக்கொள்ள முடியுமென தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் லக்சிறி இந்திரதிலக்க கூறியுள்ளார்.

கடந்த மாதம் 20 ஆம் திகதி அதிகாலை பூவெலிகட பகுதியில் 05 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்தமையினால் சிசுவொன்றும் அதன் பெற்றோரும் உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கட்டட உரிமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்