20 ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் மூன்றாவது நாளாக பரிசீலனை

by Staff Writer 02-10-2020 | 8:48 PM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று மூன்றாவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த சட்டமூலம் விருப்பத்திற்கேற்ப பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்றல்ல எனவும் நாட்டினதும் மக்களினதும் நலன்கள் தொடர்பாக மிக உன்னிப்பாகக் கவனம் செலுத்தி சமர்ப்பிக்கப்பட்ட மிகவும் அத்தியாவசியமான திருத்தம் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன உயர் நீதிமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டினார். இதுபோன்ற அத்தியாவசிய திருத்தத்தை நிறைவேற்ற பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தத் தேவையில்லை என்று தாம் கருதுவதாகவும் அவர் கூறினார். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றதைப் போல, 20 ஆவது திருத்தத்திற்கும் பெறுவது போதுமானது என ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன கூறினார். இடைமனுதாரர்களில் ஒருவரான அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் சார்பில் மன்றில் ஆஜராகி அவர் இந்த விடயங்களை மன்றில் முன்வைத்தார். நாட்டின் இறையாண்மைக்கும் எதிர்கால பயணத்திற்கும் இடையூறாக 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் இருக்கும் சரத்துக்களை நீக்கி , மிகவும் வலுவான மக்கள்மயமான அரசியலமைப்பை உருவாக்குவது மாத்திரமே 20 ஆவது திருத்தத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார். ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தி MTV/MBC ஊடக வலையமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி விடயங்களை தெளிவுப்படுத்தினார். நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கு ஊடக சுதந்திரம் மிக முக்கியமானது என அவர் குறிப்பிட்டார். ஊடக சுதந்திரத்திற்கு எவரேனும் ஒருவர் இடையூறு ஏற்படுத்தினால், அது நாட்டு மக்களுக்கு இருக்கும் தகவலறியும் உரிமையை முழுமையாக மீறியதாக அமையும் என அவர் மன்றில் சுட்டிக்காட்டினார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தில் கூறப்படும் வகையில், தேர்தல் நடைபெறும் சந்தர்ப்பங்களில் அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அல்லது ஏனைய நிறுவனங்களுக்கு இடமளித்தல் மிக மோசமான விடயம் என ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன குறிப்பிட்டார். ஏதேனும் ஊடக நிறுவனம் ஒன்று, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தாக்கும் வகையில் செயற்பட்டால், குறித்த நிறுவனத்திற்கு எதிராக நாட்டில் காணப்படும் சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுப்பதே சரியானது எனவும் அவர் கூறினார். அவ்வாறு செய்யாமல் அனைத்து ஊடக நிறுவனங்களையும் கழுத்தை நெரித்து நீரில் அமிழ்த்தி கொலை செய்யும் வகையிலான கட்டளை சட்டத்தை நிறைவேற்றுவதோ அல்லது எவரேனும் அதிகாரி ஒருவரை அத்துமீறி நியமித்தோ ஊடக சுதந்திரத்தை சீர்குலைக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 20 ஆவது திருத்தத்தில் காணப்படும் ஊடக சுதந்திரத்தை குழிதோண்டிப் புதைக்கும் 23 ஆவது சரத்திற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இதற்கு முன்னர் 19 ஆவது திருத்தத்தில் அவ்வாறான சரத்தை நிறைவேற்ற மக்கள் கருத்துக்கணிப்பிற்கு செல்ல வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையும் ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது நினைவுகூர்ந்தார். இதேவேளை, பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தாக்கல் செய்த மனு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ மன்றில் ஆஜராகி விடயங்களை தெளிவுபடுத்தினார். தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை பாராளுமன்ற குழுநிலை கலந்துரையாடலின் போது சபைக்கு சமர்ப்பித்தோ அல்லது சமர்ப்பிக்காமலோ சட்ட மா அதிபரால் மன்றுக்கு அறிவிக்கப்பட்ட சரத்துக்களின் திருத்தங்களின்றியே பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என அவர் கூறினார். உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்களில் 37 மனுக்கள் தொடர்பில் விடயங்களை தெளிவுபடுத்த அனுமதி வழக்கப்பட்டிருந்தது. சிவில் பிரஜைகளால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் குறித்து சபாநாயகருக்கு அறிவித்தல் அனுப்பப்படாததால், அந்த இரண்டு மனுக்கள் குறித்தும் தெளிவுபடுத்தல்களை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.