மாத்தளை மாவட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்தார் ஜனாதிபதி

by Staff Writer 02-10-2020 | 8:04 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கிராம மக்களுடன் கலந்துரையாடும் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் மாத்தளை நாகவனாராம விகாரையில் இன்று நடைபெற்றது. நீண்ட காலமாக தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் பிரதேச மக்கள் முறையிட்டனர். மொரகாகந்த திட்டத்தை செயற்படுத்தும் போது காணிகளை இழந்தவர்களுக்கு தகுதியான இடங்களில் காணிகளை வழங்கி விட்டு உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். இங்கு நிலவும் சிறுநீரக நோய்க்கு துரித தீர்வாக ஹெட்டிபொல இரத்தமாற்று சிகிச்சைப் பிரிவின் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கூறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று தெரிவித்தது. பால் பண்ணையாளர்கள் நிவாரணக் கடன் கோரும் போது தேவையான பிணை நிபந்தனைகளை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் படி ஜனாதிபதி யோசனை தெரிவித்துள்ளார். வெஹரகலவிலிருந்து - ஹெட்டிபொல நகர் வரையுள்ள 2.5 கிலோமீட்டர் வீதி மற்றும் ஹிம்பிலியாகொட குளத்திலிருந்து ஹிம்பிலியாகொட கிராமத்திற்கான வீதியை துரித கதியில் அபிவிருத்தி செய்யுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிராம மக்களுடன் கலந்துரையாடும் செயற்றிட்டத்தின் பின்னர் கிராமத்திலுள்ள வீடுகள், விவசாய நிலங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டார். சோளச் செய்கையை வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டுள்ள பெரும்பாலானோர் இந்தக் கிராமத்தில் வாழ்வதுடன் அவர்களுடனும் ஜனாதிபதி உரையாடினார். தண்ணீருக்கே பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனால் செய்கைகள் பாதிக்கப்படுவதாகவும் தமது வாழ்வாதாரத்திற்கு தண்ணீரைப் பெற்றுக்கொள்ள வழி செய்யுமாறும் பிரதேச மக்கள் கோரினர். மக்களின் அந்தக் கோரிக்கைகளை செவிமடுத்த ஜனாதிபதி, அங்குள்ள சில மக்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை குறித்துக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ஹிம்பிலியாகொட ஆரம்ப பாடசாலைக்கு சென்றார். அங்கு மூன்று வகுப்பறைகளைக் கொண்ட கட்டடம், ஆசிரியர் இல்லம் என்பவற்றை நிர்மாணிப்பது தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.