கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கான அறிவுறுத்தல்

TRC இல் பதிவு செய்த கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தல் 

by Staff Writer 01-10-2020 | 12:16 PM
Colombo (News 1st) தங்களின் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படும் கையடக்கத் தொலைபேசிகளை மாத்திரம் இன்று (01) முதல் கொள்வனவு செய்யுமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்டாத கையடக்கத்தொலைபேசிகளுக்கு பயன்படுத்தப்படும் சிம் அட்டைகள் செயற்படுத்தப்பட மாட்டாது என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இதுவரை கொள்வனவு செய்யப்பட்டுள்ள கையடக்கத்தொலைபேசிகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை என அவர் கூறியுள்ளார். இன்று முதல் கொள்வனவு செய்யப்படும் கையடக்கத்தொலைபேசிகள் கட்டாயம் பதிவு செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும் என ஓசத சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கையடக்கத்தொலைபேசிகளை புதிய பெட்டிகளில் பொதியிட்டு புதிய தொலைபேசிகளாக விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளால் நுகர்வோர் எதிர்நோக்கக்கூடிய அசௌகரியங்களை கருத்திற் கொண்டே ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படும் தொலைபேசிகளை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட விற்பனை நிறுவனங்களில் மாத்திரம் இன்று முதல் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யுமாறு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார். புதிய தொலைபேசியை கொள்வனவு செய்யும் போது எமி (IMEI) இலக்கத்தினூடாக குறித்த தொலைபேசி பதிவு செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது குறித்து கண்டறிய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பதிவு செய்யப்பட்டுள்ளது என போலியாக ஸ்டிக்கர்களை ஒட்டி கையடக்கத்தொலைபேசிகள் விற்பனை செய்யப்படும் பட்சத்தில் 1900 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என ஓசத சேனாநாயக்க தெரிவித்தார். இதேவேளை, வௌிநாடுகளில் தனிப்பட்ட ரீதியில் கொள்வனவு செய்யும் கையடக்கத் தொலைபேசிகளுக்கு Online ஊடாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.