20 ஆவது திருத்தம்: திருத்தங்கள் குழு நிலை விவாதத்தின் போது இணைக்கப்படும் என்கிறார் அலி சப்ரி

by Staff Writer 01-10-2020 | 9:39 PM
Colombo (News 1st) 20 ஆவது திருத்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருகிறது. மனுதாரர் சார்பான சமர்ப்பணங்கள் நாளையுடன் நிறைவுக்கு வரவுள்ளன. இதனிடையே, குழுநிலை சந்தர்ப்பத்தில் 20 ஆவது திருத்தத்தில் அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் திருத்தங்கள் தொடர்பிலான ஆவணமொன்று சட்ட மா அதிபர் ஊடாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆவணத்தில் இருக்கும் விடயங்களை நடைமுறைப்படுத்தும் சட்ட ரீதியான கடப்பாடு இல்லை என்பதே மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்படும் தர்க்கமாகும். இது குறித்து களுத்துறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது நீதி அமைச்சர் அலி சப்ரி கருத்து தெரிவித்தார்.
திருத்தங்களை நாம் கொண்டு வருவோம். அமைச்சரவை, பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கமையவே நான் அவற்றை சட்டமா அதிபருக்கு வழங்கியுள்ளேன். திருத்தங்களை உயர் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கும் படி கூறி நேற்று முன்தினம் அதனை வழங்கினோம்
என அலி சப்ரி தெரிவித்தார்.