ஹாத்ராஸ் நோக்கி பயணித்த ராகுல் காந்தி கைது

ஹாத்ராஸ் நோக்கி பயணித்த ராகுல் காந்தி கைது

by Bella Dalima 01-10-2020 | 5:38 PM
Colombo (News 1st) உத்தரப்பிரதேசத்திற்குள் நுழைய காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தடை உத்தரவை மீறி நுழைந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ராஸ் சுற்றுவட்டாரப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஹாத்ராஸ் நோக்கி பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தியை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஹாத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண் ஆதிக்க சாதியை சேர்ந்த கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். மேலும், இளம்பெண்ணின் உடலை இரவோடு இரவாக அவர்களது பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி பொலிஸார் எரித்துள்ளனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் உத்தரப்பிரதேசம் சென்றுள்ளனர். எனினும், அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ராகுல் காந்தி வருகையையொட்டி அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க ஹாத்ராஸ் பகுதி நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இதனையடுத்து, சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறி ராகுல் காந்தியை உத்தரப்பிரதேச மாநில பொலிஸார் கைது செய்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் வௌியிட்டுள்ளது.