by Staff Writer 01-10-2020 | 2:16 PM
Colombo (News 1st) இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரிகளை எதிர்வரும் 06 ஆம் திகதி கோப் (COPE) குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு தொடக்கம் நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்திற்கு, நிலக்கரி நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட நிலக்கரி தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விசேட கணக்காய்வு அறிக்கையின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
லக்விஜய நிலக்கரி நிலையத்தின் முக்கியத்துவம் மற்றும் சுற்றாடல் பாதிப்பு தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை குறித்து எதிர்வரும் 08 ஆம் திகதி கலந்துரையாட குறித்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு கோப் குழு அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய அதிவேக வீதியின் செயற்பாட்டு ஆய்வு மற்றும் கொள்வனவு நடவடிக்கை தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை தொடர்பில் எதிர்வரும் 20 ஆம் திகதி கோப் குழுவில் ஆராயப்படவுள்ளது.
அன்றைய தினம் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அதிவேக வீதியின் செயற்றிட்ட முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகளுக்கு கோப் குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
களனி கங்கையின் நீர் மாசுப்படுத்தல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றாடல் ஆய்வறிக்கை தொடர்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆராயப்படவுள்ளது.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, இலங்கை முதலீட்டு சபை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றிற்கு இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட கோப் குழு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் 23 ஆம் திகதி தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தொடர்பான கணக்காய்வு அறிக்கை குறித்து கோப் குழு பரிசீலனை செய்யவுள்ளது.