இயற்கை வளங்களை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐ.நா மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 01-10-2020 | 8:47 PM
Colombo (News 1st) இயற்கை வளங்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பல்லுயிர்த்தன்மைகள் தொடர்பான மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் இணைந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, உலகளாவிய ரீதியில் பல்லுயிர்த்தன்மைக்கு கடும் அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த தசாப்தங்களில் பல்லுயிர்த்தன்மைகள் தொடர்பான கட்டமைப்பை பாதுகாப்பதற்காக இலங்கை பாரிய அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். இலங்கையின் இயற்கை வளங்களில் சிங்கராஜ வனாந்தரம், நக்கல்ஸ் உள்ளிட்ட மத்திய மலைநாடு தற்போது உலக மரபுரிமை சொத்துக்களாகும். உலக மக்களின் முன்பாக இந்த இயற்கை வளங்களைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகக் கூறும் ஜனாதிபதியின் செயல் பாராட்டுக்குரியது. இந்த தேவையை நியூஸ்ஃபெஸ்ட் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளது. இயற்கை வளங்கள் போன்றே மரபுரிமைகள் விடயத்திலும் இலங்கை செழிப்பான குடியரசாகும். அனுராதபுரம், பொலன்னறுவை புண்ணிய பூமி, சிகிரியா, கண்டி புனித பூமி, காலி கோட்டை மற்றும் தம்புளை விகாரை தற்போதைக்கு உலக பாரம்பரிய சொத்துக்களாகவுள்ளன. சேருவில மங்கள ரஜமகா விகாரை, சேருவிலவிலிருந்து மகாவலி கங்கையை அண்மித்துள்ள ஶ்ரீ பாத வரையுள்ள பாதை, ரஜகல புண்ணிய பூமி என்பனவும் உலக மரபுரிமை சொத்துக்களாக ஏற்றுக்கொள்ளப்படும் பட்டியலில் உள்ளடங்கியுள்ளன. பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சீ.எம். மத்தும பண்டார போன்ற உதாரண புருஷர்களை பின்பற்றி பின்னர் மக்கள் சக்தி குளங்களை புனரமைக்கும் திட்டத்தில் அவதானித்த எல்லங்கா குளம் தற்போது உலக தண்ணீர் உரிமையாகும். நாட்டின் நீர்ப்பாசனக் கட்டமைப்புடன் தொடர்புபட்ட ஆயிரக்கணக்கான குளங்கள் எல்லங்கா கட்டமைப்பில் இருப்பதன் காரணமாகவே இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாட்டில் குளங்களை புனரமைக்கும் போது எல்லங்கா கட்டமைப்பை பாதுகாக்கவும் அதனை கண்காணிக்கவும் வேண்டியது அவசியமாகும். சுற்றாடலை பாதுகாப்பதற்கு ஜனாதிபதியுடன் முழு நாடும் ஒத்துழைப்பு வழங்க வேண்டிய இத்தருணத்தில், சிலர் சுற்றாடலுக்கும் தொன்மை வாய்ந்த மரபுரிமை சொத்துக்களுக்கும் தீங்கிழைக்கின்றனர். எதிர்கால சந்ததிக்காக இவற்றைப் பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சியில் அனைவரும் கைகோர்க்க வேண்டியது அவசியமில்லையா?