ஐ.நா செயலாளர் நாயகத்தின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதில்

ஐ.நா செயலாளர் நாயகத்தின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதில்

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2020 | 9:27 pm

Colombo (News 1st) ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் (António Guterres) சமர்ப்பித்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளித்துள்ளது.

இலங்கையிலும் ஜெனிவாவிலும் வசிக்கும் இலங்கையின் சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட மேலும் சில தரப்பினர் இரகசிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமிருந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பதில் நிரந்தர பிரதிநிதி தயானி மென்டிஸ் பின்வருமாறு தெரிவித்துள்ளார்,

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அச்சுறுத்தல், துன்புறுத்தல் தொடர்பிலான முறைப்பாடுகள் மற்றும் பழிவாங்கல்கள் தொடர்பாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் அல்லது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அல்லது தேசிய பொலிஸ் ஆணைக்குழு போன்ற சுயாதீன தேசிய நிறுவனங்களிடம் முறையாக முறைப்பாடு செய்யுமாறு குறித்த தரப்பினருக்கு அழைப்பு விடுக்க அரசாங்கம் விரும்புகிறது. இதற்கமைய, குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். இந்த குற்றச்சாட்டுகளை ஏற்கனவே பகிரங்கமாக அரசாங்கம் நிராகரித்துள்ளது. கருத்து சுதந்திரம் மற்றும் சிவில் சமூக சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிவில் சமூக அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தி வழக்கு தாக்கல் செய்யப்படும் என உறுதியளிக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக வழமையாக செயற்படுகின்ற பாதுகாப்பு வலையமைப்பிற்கு மேலதிகமாக இராணுவ மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் குறித்த ஒருசிலரை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பதை வலியுறுத்திக் கூறுகின்றோம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்