20 ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் இரண்டாவது நாளாக பரிசீலனை

by Staff Writer 30-09-2020 | 8:52 PM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மனுக்கள் இன்று இரண்டாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மக்கள் இதுவரை காலம் அனுபவித்து வந்த உரிமைகளை ஒரு பெட்டிக்குள் அடைத்து இறுக்கப்பட்ட அதிகார ஆணியாக 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை கருத முடியும் என சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய இன்று சுட்டிக்காட்டினார். 20 ஆவது அரசியலமைப்பு மூலம் இலங்கை குடியரசின் அரச நிர்வாக கட்டமைப்பை மாற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதால், அத்தகைய திட்டத்தை மாற்றுவதற்கு முன்னதாக அதனை மக்களிடம் சமர்ப்பித்து அவர்கள் அதுகுறித்து ஆராய்வதற்கு போதுமானளவு கால அவகாசத்தை வழங்கியதன் பின்னர் மக்கள் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணி வாதங்களை முன்வைத்தார். கலாநிதி அஜந்தா பெரேரா உள்ளிட்ட கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் நால்வர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரானபோதே சட்டத்தரணி இதனைத் தெரிவித்துள்ளார். இந்த திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அநேகமான சரத்துக்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு முரணாக அமைந்துள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான ஷிரால் லக்திலக்க, விரான் கொரேயா, புலஸ்தி ஹேவாமான்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் நீதியரசர்கள் குழாமின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் மாத்திரம் நிறைவேற்றுவது போதுமானதாக அமையாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திருத்தத்தை மக்கள் கருத்து கணிப்பின் மூலமும் நிறைவேற்ற வேண்டும் என பாராளுமன்றத்தின் சபாநாயகருக்கு உத்தரவிடுமாறும் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பிலான சரத்துகள் திருத்தம் இன்றி நிறைவேற்றப்பட்டால் அரச நிர்வாகத்திற்கு உட்பட்ட ஊடக நிறுவனங்கள் மாத்திரம் அல்லாது தனியார் ஊடக நிறுவனங்களும் அரசாங்கத்தின் பிடிக்குள் சிக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக இலங்கை பத்திரிகை நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி லக்ஷ்மன் ஜெயக்குமார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார். தமது நிலைப்பாட்டிற்கு கட்டுப்படாமல் சுயாதீனமாக செயற்படுகின்ற தனியார் ஊடக நிறுவனங்களுக்கு அழுத்தங்களை பிரயோகித்து அவற்றை தமது நிலைப்பாட்டிற்குள் கொண்டுவரும் அதிகாரமும் உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அரச நிர்வாகிகளுக்கு கிடைப்பதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார். 19 ஆவது திருத்தத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட தகவல் அறியும் சட்டத்திற்கு அமைவான உரிமையை மக்களிடமிருந்து பறித்து மக்களின் வாயை அடைப்பதற்கு 20 ஆவது திருத்தத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி லக்ஷ்மன் ஜெயக்குமார் கூறியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் உயர் நீதின்றத்தில் இன்று வாதங்களை முன்வைத்தார். நாட்டின் ஜனாதிபதி மாத்திரமல்லாது பாராளுமன்றமும் மக்களின் வாக்குரிமை மூலம் கிடைத்த அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதால், அந்த அதிகாரத்தை செயற்படுத்தும் போது மிகவும் கவனமாக அதனை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் ஆட்சிக்கு கொண்டு வந்த நாட்டின் ஜனாதிபதி அல்லது பாராளுமன்றம் தமது ஆணைக்கு எதிராக சர்வாதிகாரப் பாணியில் தான்தோன்றித்தனமாக செயற்படுவதை மக்கள் ஒருபோதும் எதிர்பார்க்க மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி கூறியுள்ளார். ஆகவே, இந்த சந்தர்ப்பத்தில் உயர் நீதிமன்றத்திற்கு மிக முக்கியமான பொறுப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 19 ஆவது அரசியலமைப்பு மூலம் கிடைத்த தகவல் அறியும் உரிமையை மக்களிடமிருந்து பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரோலன் பெரேரா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்திற்கும் நாட்டின் பிரதமருக்கும் உள்ள அதிகாரங்களை 20 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி வசமாக்குவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். பிரதம நீதியரசர் தலைமையிலான உயர் நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள் மாத்திரமல்லாது சட்ட மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை தமது விருப்பத்திற்கு ஏற்ப நியமிப்பதற்கான பூரண சந்தர்ப்பம் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகின்றமை பாதகமான விடயம் எனவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்தை இந்தளவு அவசரமாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி சந்தேகத்திற்கு வித்திடுவதாகவும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துவதாகவும் ரோலன் பெரேரா தெரிவித்துள்ளார். இதேவேளை, பாராளுமன்றத்தின் குழுநிலை சந்தர்ப்பங்களின் போது முன்வைக்கப்படவுள்ள திருத்தங்களாக சட்ட மா அதிபர் நேற்று (29) சமர்ப்பித்த ஆவணம் தொடர்பாக இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது கவனத்திற்கொள்ள முடியாது எனவும் சட்டத்தரணிகள் இன்று சுட்டிக்காட்டினர்.