20 ஆவது திருத்த சட்டமூலம் குறித்த மனுக்கள் மீதான இரண்டாவது நாள் பரிசீலனை இன்று

20 ஆவது திருத்த சட்டமூலம் குறித்த மனுக்கள் மீதான இரண்டாவது நாள் பரிசீலனை இன்று

20 ஆவது திருத்த சட்டமூலம் குறித்த மனுக்கள் மீதான இரண்டாவது நாள் பரிசீலனை இன்று

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2020 | 8:10 am

Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 39 மனுக்கள் தொடர்பில் இன்று (30) இரண்டாவது நாளாக பரிசீலனை இடம்பெறவுள்ளது.

பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

இந்த மனுக்கள் தொடர்பில் 07 இடைமனுக்கள் நேற்று (29) சமர்பிக்கப்பட்டன.

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் இந்த மனுக்கள்மீதான பரிசீலனையை நிறைவு செய்ய முடியும் என பிரதம நீதியரசர் நேற்று அறிவித்தார்.

இதற்கு சட்டத்தரணிகளின் வாய்மொழிமூல சமர்ப்பனத்திற்காக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணிகளின் சமர்ப்பனத்திற்கு முன்னர், பாராளுமன்ற குழுநிலை கலந்துரையாடலின் போது சட்டமூலத்திற்கு மேலும் சில திருத்தங்களை சேர்த்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா மன்றுக்கு அறிவித்தார்.

எனினும், பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்ட விடயத்தை ஆட்சேபித்தே தாம் உயர் நீதிமன்றத்தை நாடியதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு பூரண அதிகாரம் கிடைப்பதனூடாக சட்டத்திற்கும் மேலாக புதிய பதவிநிலை உருவாக்கப்படும் என மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

உயர் நீதிமன்றத்திற்கு செல்ல மக்களுக்கு காணப்படும் அடிப்படை உரிமைக்கும் குறித்த திருத்த சட்டமூலத்தினூடக இடையூறு ஏற்பட்டுள்ளதால் அது அடிப்படை உரிமையை மீறுவதாக காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆகவே, ஜனாதிபதிக்கு பூரண அதிகாரத்தை பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பானமையூடாக மாத்திரமின்றி, பொதுமக்கள் அபிப்பிராயத்திற்கும் அதனை கொண்டு செல்ல வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரட்டை பிரஜாவுரிமை உள்ள ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகலாம் என்ற விடயம் தொடர்பில் மன்றில் தௌிவுபடுத்திய சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ, இரட்டை பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் வௌிநாட்டு அரசுகளின் கீழ் சத்தியப்பிரமாணம் வழங்குவதால் இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பில் சிக்கல் ஏற்படும் எனவும் இதனூடாக மக்களின் சுயநிர்ணயத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, குறித்த சரத்தையும் பொதுமக்கள் அபிப்பிராயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்