ரிஷாட் பதியுதீனின் சகோதரர் விடுவிப்பு

ரிஷாட் பதியுதீனின் சகோதரர் விடுவிப்பு

by Staff Writer 30-09-2020 | 4:54 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டுத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியுடன் தொலைபேசியில் உரையாடிய குற்றச்சாட்டின் பேரில் ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த கைது முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், விசாரணைகளின் போது குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்ததை அடுத்து செப்டம்பர் 9 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு மீள பெறப்பட்டதாக சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா தெரிவித்தார். அத்துடன், கடந்த 22 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுவும் மீள பெறப்பட்டது. இந்த நிலையில், ரியாஜ் பதியுதீனை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அவரது மனைவியிடம் நேற்று ஒப்படைத்ததாக சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா கூறினார். குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இந்த விசாரணைகள் தொடர்பிலான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, ரியாஜ் பதியுதீன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.