இந்து சமுத்திரம் திறந்த மற்றும் சுதந்திர வலயமாக அமைய வேண்டும்: ஜனாதிபதி

by Staff Writer 30-09-2020 | 6:22 PM
Colombo (News 1st) இந்து சமுத்திரம் அனைத்து நாடுகளுக்கும் திறந்த மற்றும் சுதந்திர வலயமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டும் என ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் முதன்முதலில் இலங்கையே பிரேரணை முன்வைத்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கொரியா, ஜேர்மன், வத்திக்கான் மற்றும் சுவிட்சர்லாந்திற்கான புதிய தூதுவர்கள் இன்று ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். இலங்கையில் COVID-19-ஐ வெற்றிகரமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தமை தொடர்பில் புதிய ஐந்து தூதுவர்களும் இதன்போது ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். சினேகபூர்வு உறவுகளுடன் அபிவிருத்திக்கான ஒத்துழைப்புகளுக்கு முன்னுரிமை வழங்குவதாக இதன்போது குறிப்பிட்டுள்ள ஜனாபதி கோட்டாபய ராஜபக்ஸ, மூலோபாய பெறுமதியான இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கை, மத்தியஸ்த வௌிநாட்டுக் கொள்கையை பின்பற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அதனால் இலங்கை மீது பல இராச்சியங்களின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.