தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கிய வழக்கு: அம்பிட்டியே சுமண ரத்ன தேரர் உள்ளிட்ட மூவருக்கு பிணை

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கிய வழக்கு: அம்பிட்டியே சுமண ரத்ன தேரர் உள்ளிட்ட மூவருக்கு பிணை

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2020 | 5:48 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – பன்குடாவெளியில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கி, கடமைக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமண ரத்ன தேரர் உள்ளிட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் இன்று குறித்த மூவரும் ஆஜரானபோது பிணையில் விடுவிப்பதற்கான உத்தரவை நீதவான் கருப்பையா ஜீவராணி பிறப்பித்துள்ளார்.

செப்டம்பர் 21 ஆம் திகதி மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமண ரத்ன தேரர் உள்ளிட்ட மூவர் பன்குடாவெளியில் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்படும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து கரடியனாறு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று, தேரருடன் கலந்துரையாடி தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை மீட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் முறைப்பாட்டிற்கமைய, கரடியனாறு பொலிஸாரினால் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யபட்டிருந்தது.

இதனடிப்படையில், ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றினால் சந்தேகநபர்களை இன்று ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அரச தரப்பு சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாரினால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததன் காரணமாக சந்தேகநபர்கள் மூவரையும் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை நவம்பர் மாதம் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்