இந்தியா தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை அதிருப்தி

இந்திய அரசின் செயற்பாடு தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபை அதிருப்தி

by Staff Writer 29-09-2020 | 12:09 PM
Colombo (News 1st) தமது அமைப்பு இந்தியாவில் முன்னெடுக்கும் செயற்பாடுகளை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு எதிரான, இந்திய அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கையாக இது அமைந்துள்ளதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், மனித உரிமை அமைப்புகளை வேட்டையாடும் செயற்பாடுகளிலும் இந்திய அரசாங்கம் ஈடுபடுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சுமத்தியுள்ளது. சபையின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதுடன், அதன் ஊழியர்களை பணியிலிருந்து இடைநிறுத்துமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் சபை கூறியுள்ளது. மேலும் சபையின் பிரசார நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுப்பணிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள், தாம் முன்னெடுக்கும் மனித உரிமை செயற்பாடுகள் அனைத்தையும் நிறுத்துவதற்கும் தம்மால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்காதிருப்பதற்குமான ஏற்பாடுகளாக அமைந்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை சாடியுள்ளது. டில்லியில் இடம்பெற்ற கலகம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இடம்பெறும் அடக்குமுறைகள் தொடர்பில் தாம் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கையாக இது அமைந்துள்ளதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில் தாம் எதிர்பார்த்திராத நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் தமக்கெதிரான பாரிய தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆய்வுகளுக்கான சிரேஷ்ட பணிப்பாளர் Rajat Khosla தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை.