by Bella Dalima 29-09-2020 | 5:51 PM
Colombo (News 1st) ஆர்மேனியா - அசர்பைஜான் படைகளுக்கிடையில் இடம்பெறும் மோதலில் பொதுமக்கள் உட்பட சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
குடியரசாக சுயபிரகடனம் செய்து கொண்டுள்ள Nagorno-Karabakh பிராந்திய இராணுவ வீரர்கள் 84 பேர், கடந்த ஞாயிற்றுக்கிழமையிருந்து உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்களும் இந்த மோதல்களின் போது உயிரிழந்துள்ளனர்.
தமது தரப்பு இராணுவத்தினரின் உயிரிழப்புகள் தொடர்பில், அசர்பைஜான் இராணுவம் தகவல் எதனையும் வௌியிடவில்லை.
இருப்பினும், தமது நாட்டில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்ததாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆர்மேனிய - அசர்பைஜான் படைகளுக்கிடையிலான மோதல் மூன்று நாட்களுக்கு முன்னர் ஆரம்பமாகியது.
இந்நிலையில், கிழக்கு ஆர்மேனிய நகரான Vardenis பகுதியில் அசர்பைஜான் படைகள் பயணிகள் பஸ் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஆர்மேனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், உயிரிழப்புகள் பதிவாகவில்லை.
சர்ச்சைக்குரிய Nagorno-Karabakh பிராந்தியம் தொடர்பான உரிமை கோரல்களால் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
மலைப்பாங்கான குறித்த பிராந்தியம் அசர்பைஜானுக்கு சொந்தமானது என சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும், 1994 ஆம் ஆண்டு போர் நிறைவு பெற்றதிலிருந்து ஆர்மேனியா அதனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.