மக்கள் சக்தி திட்டத்தின் ஐந்தாம் கட்டத்தின் இறுதி நாள் இன்று

மக்கள் சக்தி திட்டத்தின் ஐந்தாம் கட்டத்தின் இறுதி நாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

29 Sep, 2020 | 7:41 pm

Colombo (News 1st) மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் ஐந்தாம் கட்டத்தின் இறுதி நாள் இன்றாகும்.

ஐந்தாவது வருடமாகவும் கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் சென்று மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் கேட்டறிந்தனர்.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை கல்வி வலயத்திற்குட்பட்ட சில்வ கண்டி தமிழ் வித்தியாலயத்திற்கு மக்கள் சக்தி குழுவினர் இன்று சென்றிருந்தனர்.

தரம் 1 முதல் 11 வரையிலான வகுப்புகள் இங்கு காணப்படுவதுடன், மொத்தமாக இந்த பாடசாலையில் இரண்டு கட்டடங்களே காணப்படுகின்றன.

ஆரம்பப் பிரிவு 1980 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கட்டப்பட்ட ஒன்றிலேயே இயங்குகிறது.

இங்கு மலசலக்கூட வசதிகள் கூட இல்லை.

இடப்பற்றாக்குறைக்கு மத்தியில் இந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

கந்தப்பளை – கொங்கோடியா தோட்டத்தில் உள்ள வைத்தியசாலை 2005 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளது.

இந்த தோட்டப் பகுதியில் சுமார் 2000 குடும்பங்கள் குறித்த வைத்தியசாலையை பயன்படுத்தி வந்தனர்.

எனினும், தற்போது வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதால் 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள நுவரெலியா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கொங்கோடியா கிராமத்தில் இன்றைய தினம் மக்கள் சக்தி மக்கள் அரண் ஸ்தாபிக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்திற்கு சென்ற மற்றுமொரு குழுவினர் சாந்திபுரம் பகுதிக்கு சென்று மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டனர்.

சாந்திபுரம் பகுதி மக்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மேலும், சாந்திபுரம் மக்கள் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு முறையான வீதி வசதிகள் இல்லை என மக்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை கம்பஹா மாவட்டத்திற்கு சென்ற குழுவினர் நீர்கொழும்பின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

கொழும்பு மாவட்டத்திலும் மக்கள் சக்தி குழுவினர் கள விஜயத்தினை மேற்கொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்