New Diamond கப்பலின் கெப்டனுக்கு வௌிநாடு செல்ல தடை

New Diamond கப்பலின் கெப்டனுக்கு வௌிநாடு செல்ல தடை 

by Staff Writer 28-09-2020 | 3:51 PM
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பில் தீ பரவிய MT New Diamond கப்பலின் கெப்டனாக செயற்பட்ட ஹிரோஸ் ஹெலியாஸை விளக்கமறியலில் வைக்குமாறு சட்ட மா அதிபரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதம நீதவான் மொஹமட் மிஹார் நிராகரித்துள்ளார். மேலும், கெப்டன் ஹிரோஸ் ஹெலியாஸூக்கு நீதிமன்ற அனுமதியின்றி நாட்டை விட்டு வௌியேறுவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த உத்தரவை உடனடியாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்புமாறும் பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார். அவர் தற்போது தங்கியிருக்கும் இடத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமெனில், அது தொடர்பில் மன்றுக்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்ட கொழும்பு பிரதம நீதவான், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினூடாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் அறிவித்துள்ளார். இதுவரை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள, New Diamond கப்பலின் கெப்டனுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் சமுத்திர மாசடைதல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதால், அவரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு சட்ட மா அதிபர் சார்பில் இன்று மன்றில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் திலீப பீரிஸினால் கோரிக்கை விடுக்கப்பட்டது. சட்ட மா அதிபரினால் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுவதற்கு முன்னர், அவர் நீதிமன்ற செயற்பாடுகளை தவிர்ப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளமையினாலேயே தாம் இந்த கோரிக்கையை விடுத்ததாக பிரதி சொலிஸிட்டர் திலீப பீரிஸ் தெரிவித்தார். சட்ட மா அதிபரின் குறித்த கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான், குறித்த கெப்டன் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பாணையை ஏற்று இன்று மன்றில் ஆஜராகியுள்ளதாகவும் விசாரணைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை பெறும் நோக்கில் அவருக்கு மன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டதாகவும் கூறினார். இதனால், சந்தேக நபருக்கு எதிராக விளக்கமறியல் உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம் தமது நீதிமன்றத்திற்கு இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதனடிப்படையில், வழக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ஏனைய செய்திகள்